அதிகாரம் 63. இடுக்கண் அழியாமை. அதிகார முன்னுரை: அஃதாவது, வினையின்கண் முயல்வான், தெய்வத்தானாக, பொருள்இன்மையானாக, மெய்வருத்தத்தானாகத் தனக்கு இடுக்கண் வந்துழி, அதற்கு மனங்கலங்காமை. அதிகார. முறைமையும் இதனானே விளங்கும்.

___________________________ குறள் 627
இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதா மேல். (07) இதன்பொருள் உடம்பு இடும்பைக்கு இலக்கம் என்று = நாற்கதியினும் உள்ள உடம்புகள் இடும்பை என்னும் வாளுக்கு இலக்கு என்று தெளிந்து;
கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்= தம்மேல் வந்த இடும்பையை இடும்பையாகக் கொள்ளார் அறிவுடையார். உரைவிளக்கம் ஏகதேச உருவகம். 'உடம்பு' சாதிப்பெயர். 'கலக்கம்' என்னும் காரியப்பெயர் காரணத்தின்மேல் நின்றது. 'கையாறு' என்பது ஒருசொல்; இதற்கு ஒழுக்கநெறி என்று உரைப்பாரும் உளர். இயல்பாகக்கொள்வர் என்பது குறிப்பெச்சம். ...................

கேள்வி நாற்கதி... நான்கு வகையான பிறப்பு. தேவர், நரகர், மக்கள், விலங்கு என்று நால்வகை பிறப்பு....... தமிழ் லெக்சிகன். ஏகதேச உருவக அணி....கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி , மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது. சாதிப் பெயர்.... தேவர், நரகர் ஆகிய நான்கு வகையான பிறப்புகளை சாதிகள் என்கிறார்.
' இலக்கம் உடம்பு..' என்று குறட்பா கூறுகிறது. உடம்பு என்பது மனித உடம்பைத்தான் குறிப்பிட முடியும். விலங்குகளும், நரகர்களும்... திருக்குறள் படிக்க முடியாது. திருக்குறளும் அவைகளுக்காக எழுதப் படவில்லை.
இந்த நிலையில் 'உடம்பு' என்ற சொல்லுக்கு பல பொருள்கள் கூறி வலிந்து பொருள் கூறுகிறார் பரிமேலழகர். அதற்குப் பின் வரும் அந்தச் சொல் நான்கு பொருளையும் குறிக்கின்றது என்கிறார். அதாவது அந்தச் சொல் ஒரு ஏகதேச உருவகம் என விளக்கமும் கூறி தன் தவறான, திரிபு செய்யப்பட்ட உரையை நியாயப் படுத்துகிறார். 'சப்பைக்கட்டு' என்று பேச்சு வழக்கில் கூறுவது.
இந்த நிலையில் இந்த குறளுக்கு எப்படி பொருள் கொள்வது என்பதை பார்ப்போம்: உடம்பு என்பது உயிருடன் கூடியது. உயிரும் உடலும் இணைந்த நிலையில் உள்ள போது அது உடம்பு என்கிறோம். உயிர் இல்லாத உடல் பிணம் என்போம் . உடம்பு என்று சொல்ல மாட்டோம். அதாவது, உடம்பு என்பது உயிருடன் நாம் வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது.
நம் வாழ்க்கை, இடும்பையைத் தவிர்க்க முடியாத வாழ்க்கை என்பதை உணர்ந்த அறிவுடையோர், அதற்காகக் கலங்க மாட்டார்கள். அதிலிருந்து எப்படி மீள்வது என்று சிந்திப்பார்கள். இதற்கு மேலும் விளக்கம் ஊழ் என்ற அதிகாரத்தில் உள்ளது.